பாக்க என்ன இருக்கு?

திருமணமாகி இருபத்தியோரு வருடங்கள் முடிவதை மீண்டும் ஒரு தேனிலவுடன் கொண்டாட நினைத்தோம். மறுபடி கொடைக்கானல் போனால் என்ன என்று எண்ணி அலுவலகத்துடன் தொடர்புடைய விருந்தினர் மாளிகையில் அறை பதிவு செய்ய முயன்றது ஈடேறவில்லை.  வேறென்ன மலைப் பிரதேசம் உள்ளது என்று தேடியபோது குரங்கணி கண்ணில் சிக்கியது

.DPP_0026

இருபத்தியோராவது தேனிலவை அங்கேயே வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து பயண ஏற்பாடுகள் செய்தேன்.  ‘இதுக்கு முன்னாடி, இருபது வாட்டி தேனிலவு போயிருந்தாதான் இது இருபத்தியோராவது ஹனிமூன்’ என்றாள் சுதா.  ‘அறுபதாம் கல்யாணம்னு சொன்னா, அதுக்கு முன்னால அம்பத்தியொம்போது வாட்டி  கல்யாணம் ஆயிருக்குன்னா அர்த்தம்?’ என்று நான் உடனடியாக துணிந்து எதிர்த்துக் கேட்டதை என் மகன் மிகவும் ரசித்துப் பாராட்டினான்.

திண்டுக்கல் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து தேனிக்கும், தேனியிலிருந்து போடிக்கும் பேருந்திலும், போடியிலிருந்து குரங்கணிக்கு ஆட்டோவிலும் சென்றோம்.  மழை பெய்து ஓய்ந்திருந்தது.  விடிந்தும் விடியாத வேளையில் வயல்களும் மலைகளும் பனிப்படலத்தோடு மயங்கச் செய்தன.  ‘மூணு நாளாதான் மழை சார்.  ராத்திரி மட்டும்தான் பெய்யுது’ என்றார் ஆட்டோக்காரர்.

‘எங்கல்லாம் சார் போறீங்க?’

‘தெரியலங்க.  டாப் ஸ்டேஷன் வரை நடந்து போலாம்னு ஐடியா.  என்னல்லாம் எடம் பாக்கவேண்டியது இருக்கு?’

‘கொலுக்கு மலை, டாப் ஸ்டேஷன் ரெண்டும் போலாம்.  நீங்க போற எடம் எல்லாமே நல்ல எடம்தான் சார்.  கும்கி மைனா படம் எல்லாம் எடுத்த எடம்’

DPP_0082

ஆஹா!  சினிமாதான் நம்மை எப்படி துரத்தி துரத்தி வருகிறது?  திண்டுக்கல்லிலிருந்து தேனிக்கு செல்லும்போது பேருந்தில் சின்னக்கவுண்டர் மிக நெருக்கமாக கூடவே வந்தார்!  காலை 4.30 மணி முதல்.  திரையை ஒட்டி இருந்த முதல் இருக்கையில் பயணம்!   தேனி, அல்லிநகரம் பெயர்ப்பலகையைப் பார்த்ததுமே பாரதிராஜா நினைவுக்கு வந்தார். தேனியிலிருந்து போடி செல்கையில, பேருந்துத் திரையில் இரைச்சலாக, ‘போறாளே பொன்னுத்தாயி’.  ‘சிச்சுவேஷன் சாங்கா?’ என்று சுதா நக்கல் செய்தாள்.

ஆட்டோவில் செல்லும்போது சரியாக சுற்றும் முற்றும் பார்க்கமுடியவில்லை. குரங்கணியில் இறங்கியபோது அவ்வளவு அருகில் மழைமேகம் மறைத்து விளையாடிய ஒரு மலைமுகட்டைப் பார்த்தபோது ஒரு கணம் நனவில்தான் இருக்கிறோமா என்று சந்தேகமே வந்தது.

நடந்தோம் நடந்தோம் நடந்துகொண்டே இருந்தோம்.  மூன்று நாட்களும். வியப்பென்னும் உணர்வு அகலவேயில்லை.

DPP_0229

இதற்கு முன் காஞ்சி கைலாசநாதர் கற்றளிக்குச் சென்று நானும் மகனும் கைபேசியில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்தபோது நண்பர் கிரிதரன் ‘காமிரா எல்லாம் போதாது.  நேரே சென்றுதான் பார்க்கவேண்டும்’ என்று கமெண்ட் போட்டிருந்தார்.  (அதற்கு சுதா, ‘இருக்கிற காமிராலதானே எடுக்க முடியும்.  குத்திக் காட்டுறீங்களா?” என்று கலாய்த்திருந்தாள்).  குரங்கணியில் எனக்குத் தோன்றியதும் அதே எண்ணம்தான். காமிராவில் பதிவு செய்தெல்லாம் இதை பிறருக்கு விளக்கிவிடமுடியாது என்றுதான் தோன்றிக்கொண்டே இருந்தது.  வாங்கிய புது காமிராவில் எனக்கு படமெடுக்கத் தெரியாததால்தான் இப்படி சொல்வதாக திருமதி (சரியாகக்) கூறினார்கள்.

நாங்கள் அங்கு எதிர்கொண்ட மூன்று பெண்மணிகள் எங்களிடம் கேட்டது, ‘இங்க என்ன இருக்கு பாக்க?  போயிட்டு போயிட்டு வரீங்க?’

‘எங்களுக்கு இதெல்லாம் அதிசயம்தாங்க’ என்று சமாளித்தோம்.

DPP_0059

கொட்டகுடி, முதுவாகுடி (பழங்குடியினர் கிராமம்) என்ற இரு ஊர்களுக்குச் சென்றோம். சுற்றியிருக்கும் பேரெழில் நடுவே ஊர்கள் சூழலுக்குப் பொருந்தாமல் ‘கண்ணைக் குத்துவது’ போல் அமைந்திருக்கின்றன.    குரங்கணியில் இருந்து (டாப் ஸ்டேஷன், கொலுக்குமலை) செல்வதற்கென சரியான சாலை எதுவும் இல்லாததாலோ என்னவோ பயணிகள் அதிகம் இல்லை.  ட்ரெக்கிங் சென்று வந்த ஒரு இளைஞர் கும்பலையும், முதுவாகுடிக்குச் சென்று திரும்பும்போது காரை நிறுத்திவிட்டு பளபளவென்றிருந்த பெரிய எவர்சில்வர் அண்டாவுடன் ‘உக்காந்து சாப்பிட எடம் இருக்காக்கா?” என்று கேட்ட இன்னொரு கும்பலையும் பார்த்தோம்.

விதவிதமான மலர்கள், பறவைகள், பயணியரைக் கவர்வதற்காக விளம்பரப்படுத்தப்படும் காட்டு விலங்குகள் இதல்லாம் ஒன்றுமில்லை. பச்சைப்பசேலென ஒழுங்கமைக்கப்பட்ட டீ எஸ்டேட்கள் இல்லை.  (நாங்கள் அதுவரை செல்லவில்லை!)  ஆனால், காட்டிற்குள், ஓடையாகவும் அருவியாகவும் மாறி மாறி ஓடும் நீருடன், மூன்று நாட்கள் வாழ முடிந்தது.  வனம் சூழ்ந்த அறையில் இருந்தபோது வாசித்த கொற்றவையின் ‘நீர்’ புதிய பரிமாணங்களை உணர்த்தியது.

ஊர் திரும்பியபின் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் சொன்னார், ‘இந்தியால நிறைய இடம் இருக்கு பாக்க.  என்ன நான் சொல்றது?’ என்றார்.  ‘ஆமாமாம்’ என்றேன்.  அதற்கு மேல் யோசிக்கவில்லை.

DPP_0148

மேலும் படங்கள் இங்கே

பின்னூட்டமொன்றை இடுக